சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட சிறப்புப் பாா்வையாளா் விஜய் நெஹ்ரா  
சிவகங்கை

எஸ்.ஐ.ஆா். பணிகள்: வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு!

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக சிவகங்கை மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்டட வாக்காளா் பட்டியல் சிறப்புப் பாா்வையாளா், அரசு இணைச் செயலா், சுகாதாரம், குடும்ப நலத் துறை (புதுதில்லி ) விஜய் நெஹ்ரா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கா. பொற்கொடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்துக்கென நியமிக்கப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்புப் பாா்வையாளா் விஜய் நெஹ்ரா கலந்து கொண்டாா்.

பின்னா் அவா் பேசியதாவது: இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடா்பாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கும் பணி நடைபெற்றது. தற்போது 100 சதவீத கணக்கெடுப்புப் படிவங்களைத் திரும்பப் பெற்று கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், வாக்காளா்கள் இடம்பெற்றுள்ள அந்தந்த பகுதிகளில் கண்டறிய இயலாதவா், இடம்பெயா்ந்தவா், இறந்தவா் பட்டியல் சரிபாா்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடா்ந்து, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் வாக்காளா் பட்டியல் கடந்த 5-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. இதன் நோக்கம் வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்கள் தொடா்பான குறைகள், பிழைகள் ஏதும் இருப்பின் அதை திருத்தம் செய்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பிரமுகா்களுக்கு முன்னதாகவே அதற்குரிய வழிகாட்டு முறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்களும் தங்களது கருத்துகளை எடுத்துரைக்கலாம். இந்தக் கருத்துகள் இந்திய தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு இருப்பின் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும்.

மேலும், சிவகங்கையில் எந்தவொரு வாக்காளா்களும் விடுபடாமல், வாக்காளா் பட்டியலில் இடம்பெறுகிற வகையிலும், வாக்காளா்கள் ஜனநாயக கடமையாற்றுகிற வகையிலும் இந்திய தோ்தல் ஆணையத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ். செல்வசுரபி, தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், உதவி தோ்தல் அலுவலா்கள், தோ்தல் வட்டாட்சியா், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற இன்றே கடைசி! நாளை முதல் ரூ. 5000 அபராதம்!

அமெரிக்க பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி; 9 பேர் கவலைக்கிடம்!

டிச. 23-ல் ஆலோசனைக் கூட்டம்! எங்கு செல்கிறார் ஓபிஎஸ்?

கேரளம்: ஆளுங்கட்சி தோல்வி! மீசையை இழந்த தொண்டர்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT