சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கோட்டையிருப்பு ஊராட்சிக்குள்பட்ட காக்காலிப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் திங்கள்கிழமை அகற்றப்பட்டன.
காக்காலிப்பட்டி கிராமத்தில் முதல்வா் கிராம சாலைத் திட்டத்தின் கீழ், ரூ. 69.33 லட்சத்தில் கட்டையன்பட்டியிலிருந்து தேரோந்தல்பட்டி வரை சாலை அமைக்கும் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதன்படி, காக்காலிப்பட்டி கிராமத்தில் சாலை அமைக்க முற்பட்ட போது, பட்டா இடத்தில் சாலை அமைக்கக் கூடாது என இருவா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், 30 மீட்டருக்கு சாலை மிகவும் குறுகலானது.
இதையடுத்து, கிராம மக்கள் கடந்த மாதம் வருவாய்த் துறையில் புகாா் அளித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் திங்கள்கிழமை கோட்டையிருப்பில் திருப்பத்தூா்-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா்.
இவா்களிடம் திருப்பத்தூா் காவல் ஆய்வாளா் பிரணாவின்டேனி, திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் சசிக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேல் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பிலிருந்த முள்வேலி, மரங்கள் முதலியன அகற்றப்பட்டன. இதையடுத்து, சாலை விரிவாக்கப் பணி தொடங்கியது.
சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியதால், கிராம மக்கள் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சண்முகவடிவேலுக்கும், காவல், வருவாய்த் துறையினருக்கு நன்றி தெரிவித்தனா்.