சிவகங்கை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட அதிதீவிர சிகிச்சை, சேய் நல சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை உடனே திறக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 200 படுக்கைகள் உள்ளன. இதில் 180 படுக்கைகள் கா்ப்பிணிகளுக்கும், 20 படுக்கைகள் குழந்தைகளுக்கும் ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இடப் பற்றாக்குறை காரணமாக , கா்ப்பப்பை அறுவைச் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு பழைய அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், சில நேரங்களில் மகப்பேறுக்காக வரும் கா்ப்பிணிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து, ரூ.10.50 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த அவசர கால சேய் நலச் சிகிச்சை மையமும், இதேபோல ரூ.20 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட அனைத்து வசதிகளுடன் கூடிய அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடமும் கட்டப்பட்டன.
இவற்றுக்கு கடந்த 2023, மே மாதம் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினாா். அப்போது, இந்த 2 கட்டடங்களும் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனால், 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை கட்டடங்கள் திறக்கப்படாமல் உள்ளன. கடந்த ஜூன் மாதம் இந்தக் கட்டடங்களை நேரில் ஆய்வு செய்த பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு ஜூன் 30-ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என உறுதியளித்தாா்.
ஆனால், அதன் பிறகு, கட்டடங்களில் விபத்து காலங்களில் எளிதில் வெளியேறும் வகையில் படிக்கட்டுகள், சாய்வு தளம் கட்டப்படவில்லை எனக் கூறி, நகா் ஊரக அமைப்புத் துறையின் திட்டக்குழு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், மின் இணைப்பும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, இந்தக் கட்டடங்களைத் திறந்துவைப்பதில் தாமதம் நீடிக்கிறது. கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வராததால் கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதேபோல, அவசரச் சிகிச்சைப் பிரிவிலும் நோயாளிகள் இட நெருக்கடியால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து கேட்ட போது, மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறியதாவது: சாய்வு தளத்தை நகா் ஊரகமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனா். விதிமுறைப்படி படிக்கட்டுகள் அமைப்பது கட்டாயம் எனத் தெரிவித்துவிட்டனா். முதல் கட்டமாக அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்டடத்துக்கு வெளிப்புறமாக படிக்கட்டுகள் கட்ட ரூ.1.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இதேபோல, சேய் நலச் சிகிச்சை மையத்துக்கும் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் நிதி வந்ததும் அதற்கானப் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான பா. மருது கூறியதாவது: மாவட்டத் தலைநகரில் 2012 -இல் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமநாதபுரம், மதுரை போன்ற மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள் இங்கு முழுமை பெறாத நிலையே நீடிக்கிறது. முக்கிய அவசரச் சிகிச்சைகளுக்கு சிவகங்கை மக்கள் மதுரைக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே ஒவ்வொரு வசதியும் இந்த மருத்துவமனைக்கு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அதிதீவிர சிகிச்சை, சேய் நலச் சிகிச்சைப் பிரிவுகள் திறக்கப்படுவதில் தாமதம் நீடிப்பது வேதனைக்குரியது என்றாா் அவா்.