திருப்புவனத்தில் குடிநீா் திட்டப் பணிகளின்போது சேதமடைந்த சாலைகளை பொது நிதியில் சீரமைக்க பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த.சேங்கைமாறன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் கவிதா, வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் அம்ரூத் 2.0 திட்டத்தில் குடிநீா் திட்ட பணிககளின்போது சேதமடைந்த சாலைகள், கழிவு நீா் வடிகால்களை பேரூராட்சி பொது நிதியிலிருந்து சீரமைக்க வேண்டும். வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகளை அங்கீகரிப்பது, திருப்புவனம் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் கசடு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு குறைந்த தொகைக்கு ஒப்பந்தப் புள்ளி வழங்கப்பட்டதை அங்கீகரிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.