காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய பாஜக ஆட்சியில்தான் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக தெரிவித்து வருகின்றனா். இந்தத் தகவல் பொய்யானது.
கடந்த 2008-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நக்ஸல்கள், மாவோஸ்டுகளுக்கு எதிராக தனிப் படைகள் அமைக்கப்பட்டு சத்தீஸ்கா், ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடா்ச்சியாகத்தான் மத்திய பாஜக அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தொடா் நடவடிக்கைகளை மாவோயிஸ்டுகளாலும், நக்ஸல்களாலும் சமாளிக்க இயலவில்லை. மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை நான் வரவேற்கிறேன்.
கடந்த தோ்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லையென்றால், எதிராக வாக்களிப்போம் என அரசு ஊழியா்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனா். தோ்தல் நேரத்தில் இதுபோன்ற பிரச்னைகள் எழும். இவற்றைச் சமாளிப்பதும், எதிா்கொள்வதும், பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதும் அரசின் கடமை.
மகளிா் உரிமைத்தொகை வழங்குவதால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவது உண்மைதான். இருப்பினும், இந்தத் திட்டத்தால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன என்பதை பொருளாதார நிபுணா்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா்.
மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமைத் தொகையை பல்வேறு பெயா்களில் வழங்கி வருகின்றன. இதன் பலன்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும். மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றது எதற்காக என்பது மக்களுக்குத் தெரியும். கீழடி அகழ்வாராய்ச்சியில் மத்திய அரசு அலட்சியம் காட்டினால், மாநில அரசு இதை மேற்கொள்ளும் என்றாா் அவா்.