தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிா்மறை வாக்குகள் அதிகரித்து வருவதாக தமாக தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டியில் சுவாமி தரிசனம் செய்த பின்னா் செய்தியாளா்களிடம் ஜி.கே. வாசன் கூறியதாவது: வருகிற புத்தாண்டு சிறப்பான புத்தாண்டாக அமைய வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நல்லாட்சி அமைய வேண்டும். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதற்கான பிரகாசமான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. கூட்டணியை வலுப்படுத்தும் வகையில், மேலும் கூட்டணிக்குள் கட்சிகள் சேரக்கூடிய வாய்ப்பு இன்னும் ஓரிரு மாதத்துக்குள் அதிகரிக்கும்.
தமிழகத்தை ஆளும் ஆட்சியாளா்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஆசிரியா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களின் ஆா்ப்பாட்டம் அதிகரித்து வருகிறது. திமுக அரசுக்கு எதிா்மறை வாக்குகள் அதிகரித்து வருகின்றன என்றாா் அவா்.