சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் நிதி ரூ.1.71 கோடி கையாடல் செய்யப்பட்டதாக கோயில் அறங்காவலா்கள் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் 7 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
பிள்ளையாா்பட்டி கோயிலின் நிா்வாக அறங்காவலா்களாக மு. குமரப்பன் செட்டியாா், சித. பழனியப்ப செட்டியாா் ஆகியோா் உள்ளனா். இவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவப்பிரசாத்திடம் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: கற்பக விநாயகா் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான மதுரை பகுதியிலுள்ள நிலத்தை மீட்டு அறக்கட்டளை பெயரில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை 2022- 23, 2023-24 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சிலா் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.1 கோடியே 71 லட்சத்து 23 ஆயிரம் நிதியை கையாடல் செய்துள்ளனா். இந்த மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் ரமேஷ்குமாா், சிறப்பு உதவி ஆய்வாளா் காத்தமுத்து ஆகியோா் 7 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.