சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - சிவகங்கை சாலையின் ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் அண்ணா சிலை அருகே சிவகங்கை செல்லும் சாலை ஓரங்களில் கனரக வாகனங்கள், கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் உள்ளிட்டவை போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தச் சாலையை மீன் சந்தைக்குச் செல்லும் மக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு செல்வோா் என பல தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனா். இதனால், இந்தச் சாலையில் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும்.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கிரேன்களுடன் கூடிய வாகனங்கள் சிறிது பழுதுபட்டாலும் சாலையில் செல்லும் வாகனங்களின் மீது விழும் சூழல் உள்ளது. எனவே, விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பே இந்தப் பகுதியில் வாகனங்களை நிறுத்த த் தடை செய்ய வேண்டும் எனக் கோரி காவல் நிலையத்திலும் திருப்பத்தூா் பேரூராட்சியிலும் பொதுமக்கள் மனு அளித்தனா். இந்தப் பிரச்னை குறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் பேசி மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.