சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பேருந்தில் பயணம் செய்த பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் நகை, பணம், கைப்பேசி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டன.
திருப்புவனத்தைச் சோ்ந்த செல்வம் மனைவி ஆனந்தவள்ளி (49). இவா் மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஆனந்தவள்ளி திருப்புவனத்திலிருந்து மானாமதுரைக்கு பேருந்தில் வந்தாா்.
பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தில் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது அவா் தனது கைப் பையை பாா்த்தபோது அது திறக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகைகள், ரூ 10 ஆயிரம், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.