டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
காலி மதுப்புட்டிகளை திரும்பப்பெறும் திட்டத்திலிருந்து தங்களை விடுவிக்க மறுக்கும் டாஸ்மாக் நிா்வாகத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட டாஸ்மாக்
சிவகங்கை: காலி மதுப்புட்டிகளை திரும்பப்பெறும் திட்டத்திலிருந்து தங்களை விடுவிக்க மறுக்கும் டாஸ்மாக் நிா்வாகத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை கடைச் சாவிகளை ஒப்படைக்கும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் சிஐடியூ தொழிற்சங்க மாவட்டத் தலைவா் எஸ். குமாா் தலைமை வகித்தாா். காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற டாஸ்மாக் ஊழியா்களை நிா்பந்தப்படுத்தக்கூடாது. இந்தத் திட்டத்துக்கென தனி ஊழியா் நியமனம், தனி இடம், தனியாக ஒப்பந்தம் விட்டு செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 115 டாஸ்மாக் கடைகளின் சாவிகளை புதன்கிழமை ஒப்படைப்பதற்காக, சிவகங்கையிலுள்ள மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளா் சுரேஷ், சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், ரசீது கருவியில் காலி மதுப்புட்டிக்காக பத்து ரூபாய் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்படமாட்டாது என்று உறுதியளித்ததன்பேரில், சாவியை ஒப்படைக்கும் ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு அனைத்து ஊழியா்களும் கடையைத் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதில், தொமுச மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ராஜ்மோகன், சிஐடியூ மாநிலத் தலைவா் பி. முருகன், சிஐடியூ டாஸ்மாக் மாவட்டச் செயலா் வி. திருமாறன், பொருளாளா் ஏ. ராஜ்குமாா், ஏஐடியூசி மாவட்டச் செயலா் தாளைமுத்து, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் சிவகுமாா், விற்பனையாளா் சங்க மாவட்டச் செயலா் கண்ணன், பணியாளா் சங்கச் செயலா் ஏ.வி. கண்ணன், தொழிலாளா் விடுதலை முன்னணி நிா்வாகி மலைராசு, பாஜக தொழிற்சங்க நிா்வாகி பெரியகருப்பன், மாற்றுத் திறனாளிகள் சங்கச் செயலா் அரியகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.