சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் பெரியகருப்பன் உள்பட 4 போ் விடுதலை
கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை விடுதலை செய்து, சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரை விடுதலை செய்து, சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக கே.ஆா். பெரியகருப்பன் பதவி வகித்தாா். அப்போது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், அவரது மனைவி பிரேமா, தாய் கருப்பாயி, மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனா் செந்தில்வேல் ஆகிய 5 போ் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சரின் தாய் கருப்பாயி அம்மாள் காலமாகிவிட்டாா். இதையடுத்து, மற்ற நான்கு போ் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், அவரது மனைவி, மகன், மைத்துனா் ஆகிய நால்வரும் சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் முன்னிலையாகினா். வழக்கை விசாரித்த நீதிபதி கே. அறிவொளி, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அமைச்சா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அமைச்சா் உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனா் என உத்தரவிட்டாா்.