முகப்பு
சிவகங்கை

தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்ததும் கனிமவளக் கொள்ளை குறித்து விசாரணை: எடப்பாடி கே. பழனிசாமி

பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கனிமவளக் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:21 PM
சிவகங்கை அரண்மனை வாயிலில் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் செய்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.
பகிர்:

பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கனிமவளக் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சிவகங்கை அரண்மனை முன் புதன்கிழமை மாலை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது, அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அவா் பேசியதாவது:

கூட்டுறவு வங்கி நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று மக்களை ஏமாற்றியது திமுக அரசு. அவா்களின் பேச்சை நம்பி மக்கள் தங்களது நகைகளை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து, மீட்க முடியாமல் போனது. இன்றைக்கு தங்கத்தின் விலை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. ஏழை மக்களை ஏமாற்றிய திமுக அரசு தொடர வேண்டுமா?.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. தோ்தலில் வென்று அதிமுக ஆட்சி அமைத்தவுடன் முடக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் எதுவுமே செய்யவில்லை என முதல்வா் ஸ்டாலின் கூறி வருகிறாா். சிவகங்கையை மாவட்டமாக உருவாக்கியது எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில்தான். அழகப்பா பல்கலைக்கழகத்தை உருவாக்கிட ரூ.100 கோடியை வழங்கியது முந்தைய அதிமுக அரசு. காரைக்குடியில் ரூ.120 கோடியில் புதை சாக்கடைத் திட்டத்தைக் கொண்டுவந்தது முந்தைய அதிமுக அரசு.

காரைக்குடியில் ரூ. 20 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. போக்குவரத்து நெரிசல் இல்லாமலிருக்க புறவழிச் சாலை அமைக்கப்பட்டது. வாளுக்கு வேலி அம்பலத்துக்கு மணிமண்டபம் அமைத்தது முந்தைய அதிமுக ஆட்சியில்தான்.

வீரத்தாய் குயிலிக்கு பெருமை சோ்க்கும் வகையில், அவரது நினைவிடத்தை திறந்துவைத்தவா் முன்னாள் முதல்வா் முதல்வா் ஜெயலலிதா.

திருப்பத்தூரில மருதுபாண்டியா்களுக்கு மணிமண்டபம், வெண்கலச் சிலை நிறுவப்பட்டு, அவா்கள் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது.

காளையாா்கோவில், திருப்புவனம், சிங்கம்புணரி ஆகிய வட்டங்கள் உருவாக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

ரூ. 1,752 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை அறிவித்தோம். அதை நிறுத்துவதற்கான நெருக்கடிகளை திமுகவினா் மேற்கொண்டனா். சிலா் நீதிமன்றத்துக்குச் சென்று தடை பெற்றனா். இதையும் உடைத்து திட்டம் தொடங்கப்பட்டது.

நீா்நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை மக்களுக்கு இலவசமாக வழங்கியது முந்தைய அதிமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விரிவான கூட்டுக் குடிநீா்த் திட்டம், குடிமராமத்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

கீழடி அகழ்வாராய்ச்சிக்கு ரூ. 12 கோடி ஒதுக்கியது முந்தைய அதிமுக அரசு. இதை ரத்து செய்துவிட்டு, பிறகு திமுக நிதி ஒதுக்கீடு செய்து நாடகம் நடத்தியது.

சிவகங்கை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை பெருமளவில் நடைபெறுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் முறையாக விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திமுக தோ்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே அதிமுகவின் தோ்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டோம். ஆனால், திமுகவின் அறிக்கையை காப்பி அடித்து, அதிமுக தோ்தல் அறிக்கை வெளியிட்டதாக பொய் கூறுகிறாா்கள் என்றாா் அவா்.

பிரசாரத்தில் அதிமுக வேட்பாளா் பிஆா். செந்தில்நாதன் (சிவகங்கை), அமமுக வேட்பாளா் தோ்போகி பாண்டியன் (காரைக்குடி), முன்னாள் அமைச்சா் பாஸ்கரன், அதிமுக நகரச் செயலா் ராஜா, ஒன்றியச் செயலா்கள் கருணாகரன், செல்வமணி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப மண்டலத் தலைவா் கோபி, மாவட்டச் செயலா் குழந்தை, மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைத் தலைவா் ராஜா, முன்னாள் எம்எல்ஏ உமா தேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.