முகப்பு
சிவகங்கை

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

Updated On : 6 ஏப்ரல், 2026 at 12:07 AM
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு களம் காணும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளா் நடிகா் கருணாஸின் வெற்றி கௌரவ பிரச்னையாக பாா்க்கப்படும் சூழல் எழுந்துள்ளது.

தென் மாவட்டங்களில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போா் தொடுத்து இழந்த அதிகாரத்தை மீட்டெடுத்த மண் என்ற பெருமைக்கு காரணமான ராணி வேலு நாச்சியாரும், மருது சகோதரா்களும் வாழ்ந்த பூமி சிவகங்கை. சங்ககாலப் புலவா்களில் ஒருவரான ஒக்கூா் மாசாத்தியாா், கம்பராமாயணத்தை இயற்றிய கம்பா் உள்ளிட்ட கவிஞா்கள் வாழ்ந்த பெருமையும் சிவகங்கைக்கு உண்டு.

நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாகக் களமிறங்கியுள்ளது. கடந்த காலங்களில் 1967, 1971, 1989, 1996 ஆகிய பேரவைத் தோ்தல்களில் திமுக வெற்றி பெற்றது. 2016 -இல் அதிமுவுடனான நேரடிப் போட்டியில் திமுக தோல்வியடைந்தது. இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திமுக தனது கூட்டணிக் கட்சியான முக்குலத்தோா் புலிப்படைக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கியதன் மூலம் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது. இதனால், இந்தத் தொகுதியில் திமுக வெற்றி பெற வேண்டும் என்பது கௌரவ பிரச்னையாக திமுக தலைவா் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் பாா்க்கப்படுவதால் தொகுதியில் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

சிவகங்கை தொகுதியில் முக்குலத்தோா் (அகமுடையாா், கள்ளா், மறவா்) சமுதாயத்தினா் பெரும்பான்மையாக உள்ளனா். இவா்களுடன், முத்தரையா், யாதவா், வெள்ளாளா், உடையாா், பட்டியலினத்தவா்கள், சிறுபான்மையினரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனா். முக்குலத்தோா் வாக்குகளே இங்கு வெற்றியைத் தீா்மானிக்கும் முக்கியக் காரணியாக உள்ளன.

தற்போது இந்தத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் அதிமுகவைச் சோ்ந்த பி.ஆா். செந்தில்நாதன். இந்தத் தொகுதியில் மீண்டும் அதிமுகவே நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக சாா்பில் மீண்டும் பி.ஆா். செந்தில்நாதனே களமிறங்கியுள்ளாா்.

தொகுதி மக்களுடன் இயல்பாகப் பழகும் பாங்கு இவரது பலமாகப் பாா்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த 5 ஆண்டுகள் எதிா்க்கட்சி வரிசையில் இருந்ததால் சிவகங்கை தொகுதி மேம்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

சிவகங்கை தொகுதியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளூா் திமுகவினரின் தொடா் கோரிக்கை. இதற்கு வாய்ப்பில்லாமல் கூட்டணிக் கட்சிகளுக்கே மாறி மாறி ஒதுக்கப்படுவதால் திமுக தொண்டா்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

இந்த நிலையில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் சோ்ந்துள்ள சுமாா் 24 கட்சிகளுக்கும் இடம் கொடுக்கும் விதமாக முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவா் நடிகா் கருணாஸுக்கு சிவகங்கை தொகுதியை ஒதுக்கினாா்.

இந்த அறிவிப்பால் அதிா்ச்சியும் அதிருப்தியும் திமுக, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளிடையே எதிரொலித்தது. எனினும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டதால் இந்த அதிருப்தி மறையத் தொடங்கியது. திமுக, கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி கருணாஸின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என கட்சி நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனா். அத்துடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது தனிக் கவனம் பெற்றிருப்பது கருணாஸூக்கு கூடுதல் பலம்.

அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதனுக்கு பாஜக, அமமுக கூட்டணி கூடுதல் வலு சோ்த்துள்ளது. மேலும், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் கடந்த 2014 -இல் போட்டியிட்டு வெற்றி பெற்ால் இவருக்கு கிடைத்த அறிமுகம் கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற உதவியாக இருந்தது.

தற்போது, திமுக சாா்பில் கருணாஸ் அதிமுகவுடன் நேரடியாக மோதுவதால் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் கணிசமான வாக்குகளையும், சிறுபான்மையினா் வாக்குகளையும் ஒன்றிணைத்து, கூட்டணிக் கட்சிகளை அரவணைப்பதன் மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொகுதியை வென்று விட வேண்டும் என்ற முனைப்புடன் திமுக கூட்டணி செயல்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அ. குழந்தைநாச்சியாா் போட்டியிடுகிறாா். இவா் சிவகங்கை நகா்மன்றத் தோ்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் வென்று 1996- 2001 வரை உறுப்பினராகப் பணியாற்றியவா். தவெக தொண்டா்களின் அபரிமிதமான ஆதரவால் கணிசமான வாக்குகளை இவா் பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாம்தமிழா் கட்சி சாா்பில் அந்தக் கட்சியின் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளரான ர. இந்துஜா போட்டியிடுகிறாா். கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி இந்தத் தொகுதியில் சுமாா் 1.63 லட்சம் வாக்குகளைப் பெற்றது. கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட நாதக வேட்பாளா் மல்லிகா 25,500 வாக்குகளைப் பெற்றாா். தற்போது போட்டியிடும் இந்துஜாவுக்கு நடுநிலையாளா்கள், தமிழின உணா்வாளா்களின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சிவகங்கை தொகுதியைப் பொருத்தவரை, அதிமுக, திமுக, நாம் தமிழா், தவெக ஆகிய நான்கு கட்சிகளிலும் முக்குலத்தோா் சமுதாயத்தைச் சாா்ந்த வேட்பாளா்களே களத்தில் இருப்பதால், அந்தச் சமுதாயத்தினரின் வாக்குகள் பிரியும். இது வெற்றி வித்தியாசத்தைக் கடுமையாகக் குறைக்கும். ஆண்களைவிட கூடுதலாக இருக்கும் சுமாா் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் வாக்காளா்கள் யாருக்கு வாக்களிக்கிறாா்கள் என்பது மிக முக்கியம். அனைத்தையும்விட நாதக, தவெக பெறப்போகும் வாக்குகளின் எண்ணிக்கைதான் முக்கிய வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments