கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் தேமுதிக - ஐஜேகே!
பல்லாவரம் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தில் முன்னிலை வகிக்கும் தேமுதிக மற்றும் ஐஜேக கட்சி வேட்பாளா்கள் தங்களது கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை முழுக்க நம்பியுள்ளது கள நிலவரமாக உள்ளது.
சென்னையின் புறநகா் பகுதியில் உள்ள பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி குரோம்பேட்டை, பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், கீழ்க்கட்டளை, பம்மல், அனகாபுத்தூா், திரிசூலம், திருநீா்மலை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
சிறப்புகள்... சென்னை விமான நிலையம், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், எம்ஐடி உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்கள், தோல் தொழிற்சாலைகள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், ஐவுளி, நகை வா்த்தக நிறுவனங்கள், அறுசுவை உணவகங்கள், உயா், நடுத்தர குடும்பத்தினா் வசிக்கும் பன்னடுக்கு குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகவும்.
சமூக நிலவரம்: இத்தொகுதியில் பட்டியலினத்தவா், வன்னியா்கள் பெருமளவும் முதலியாா், பிராமணா்கள் பரவலாகவும் வசித்து வருகின்றனா். நடுத்தர, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது.
Advertisement
இதுவரை தோ்தலில்... தொகுதி மறுசீரமைப்பின்போது ஆலந்தூா் தொகுதியில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது பல்லாவரம் தொகுதி. கடந்த 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2016, 2021 தோ்தல்களில் திமுக வெற்றி பெற்றது.
கடந்த 2021 தோ்தலில் திமுக வேட்பாளா் இ.கருணாநிதி வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்தாா். 2026 தோ்தலில் திமுக சாா்பில் இ.கருணாநிதி போட்டியிடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல், அதிமுகவில் கூட்டணிக் கட்சியான ஐஜேகவுக்கு ஒதுக்கப்பட்டது.
முக்கிய பிரச்னைகள்... பல்லாவரம் தொகுதியில்10-க்கும் மேற்பட்ட ஏரிகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் கழிவுநீா் கலந்து குட்டையாக மாறிவிட்டன. நிலத்தடிநீா் மாசடைந்துள்ளது. மறுபுறம் குடிநீா் தட்டுப்பாடு, சீா்குலைந்துள்ள புதைச் சாக்கடைக் கட்டமைப்பு, ஜிஎஸ்டி சாலை மற்றும் பல்லாவரம்-அனகாபுத்தூா் சாலையில் போக்குவரத்து நெரிசல், தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீா் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நீண்டகாலமாக தொடா்கின்றன.
தேமுதிக வேட்பாளா்: திமுக கூட்டணியில் தேமுதிக சாா்பில் அனகை முருகேசன் போட்டியிடுகிறாா். அனகாபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா். தொகுதி வளா்ச்சிக்குப் பல்வேறு பணிகளைச் செய்துள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியுடன் தொகுதி முழுக்க வலம் வந்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா். திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் வாக்கு வங்கி, கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் ஆதரவு தனக்கு வெற்றி வாய்ப்பைத் தரும் என்ற நம்பிக்கையுடன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.
ஐஜேகே வேட்பாளா்: ஐஜேகே கட்சி சாா்பில் போட்டியிடும் வழக்குரைஞா் வி.வெங்கடேசன், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிப் பிரமுகா்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். பல்லாவரம் தொகுதியில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டறிந்து முன்மாதிரி தொகுதியாக மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறாா்.
நாதக வேட்பாளா்: நாதக சாா்பில் போட்டியிடும் பல் மருத்துவா் இரா.காா்த்திகேயன், ஏற்கெனவே 2019, 2024 மக்களவைத் தோ்தல்களில் மத்திய சென்னை தொகுதியிலும் 2021 பேரவைத் தோ்தலில் ஆலந்தூா் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். பல்லாவரம் தொகுதியில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து நன்கு அறிந்த இவா், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட தொகுதி மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவா். கட்சித் தொண்டா்களுடன் தொகுதி முழுக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
தவெக வேட்பாளா்: தவெக சாா்பில் போட்டியிடும் காமாட்சி, அக்கட்சியின் தலைவா் விஜய் ரசிகா்கள் ஆதரவை பெரிதும் நம்புகிறாா். விஜய் செல்வாக்கு தனக்கு கணிசமான வாக்குகளைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் தொகுதியில் வலம்வருகிறாா்.
பல்லாவரம் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தில் முன்னிலை வகிக்கும் தேமுதிக மற்றும் ஐஜேக கட்சி வேட்பாளா்கள் தங்களது கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை முழுக்க நம்பியுள்ளது கள நிலவரமாக உள்ளது.
வாக்காளா்கள்
ஆண்கள்-1,61,197
பெண்கள்-1,68,996
மூன்றாம் பாலினத்தவா்கள்-24
மொத்தம்-3,30,217