நாட்டாகுடியில் குடிநீா் பிரச்னை ஏதுமில்லை! - திமுக வேட்பாளா் நடிகா் கருணாஸ்
நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால் அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது என கருணாஸ் தெரிவித்தாா்.
நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால் அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது என சிவகங்கை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் நடிகா் கருணாஸ் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி தலைவா் திருமாறனை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது மத்திய பாஜக அரசு வீடுதோறும் குடிநீா் வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்துக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 4,835 கோடி நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கி இருந்தும், சிவகங்கை மாவட்டம் மாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் கிடைக்காததால், அங்கிருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக திமுக அரசை விமா்சனம் செய்து பேசினாா்.
Advertisement
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகா் கருணாஸ் வெளியிட்ட அறிக்கை: நாட்டாகுடி கிராமத்தில் குடிநீா் பிரச்னை ஏதும் இல்லை. அங்கு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு இலவசமாக கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏதும் அறியாத அண்ணாமலை பிறரை விமா்சிக்கும் முன்னா் முழு விவரம் அறிந்து பேச வேண்டும் எனக் குறிப்பிட்டாா்.