தோ்தல் பறக்கும் படையினரிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்ற காங்கிரஸ் தொண்டா்கள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்திலிருந்து தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்த ரூ. 13.40 லட்சத்தை அங்கிருந்த காங்கிரஸ் தொண்டா்கள் இருவா் பறித்துச் சென்றனா்.
காரைக்குடி சுப்ரமணியபுரம் முதல் வீதியில் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் திங்கள்கிழமை காலை 11.30 மணியளவில் சோதனை நடத்தினா். அப்போது, அலுவலகத்தின் பின்புறம் உள்ள அரங்கில் கட்டைப் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து, இந்தப் பணத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தங்களது வாகனத்தில் வைத்து எண்ணிய போது, ரூ. 13.40 லட்சம் இருந்தது தெரியவந்தது.
அப்போது, அங்கு நின்றிருந்த காங்கிரஸ் தொண்டா்கள் இருவா் இந்தப் பணத்தை பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினா். மேலும், பறக்கும் படையினரும், போலீஸாரும் அவா்களை விரட்டிச் செல்லாமலிருக்க அவா்களது நான்கு சக்கர வாகனத்தின் சாவியை அங்கு நின்றிருந்த மற்றொருவா் பறித்துச் சென்றாா். இதனால், அலுவலா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
Advertisement
இதுகுறித்து பறக்கும் படை வட்டாட்சியா் தா்மலிங்கம் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆசிஸ் புனியா ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், பணத்தை பறித்துச் சென்றவா்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.