அஜித்குமார் | அவரது தாய் மாலதி 
சிவகங்கை

நகை திருட்டுப் புகாா் கொடுத்த பேராசிரியை மீது சட்ட நடவடிக்கை: அஜித்குமார் தாய் வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

நகை திருட்டுப் புகாா் கொடுத்த பேராசிரியை நிகிதா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரின் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் தாய் மாலதி வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பேராசிரியை நிகிதா அளித்த நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லையென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது திருப்தியளிக்கிறது. இதன்மூலம், எனது மகன் திருடன் இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.

ஒரு தாயின் வலி, மற்றொரு தாய்க்குத்தான் தெரியும். இந்த வழக்கில் தாய் நிலையிலிருந்து நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்த கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பேராசிரியை நிகிதா கொடுத்த பொய்ப் புகாரை விசாரிக்க அறிவுறுத்திய உயா் அதிகாரிகள் யாா் என்பதைக் கண்டறிய வேண்டும். நிகிதா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவரைக் கைது செய்ய வேண்டும். தனிப் படைக் காவலா்கள் அனைவருக்கும் பிணை வழங்கக்கூடாது.

சிபிஐ விசாரணையில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அஜித்குமாா் மரணத்துக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

இதுகுறித்து வழக்குரைஞா் கணேஷ்குமாா் கூறியதாவது:

இந்த வழக்கில் காயமடைந்தவா்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், வழக்கில் தொடா்புடைய பிரவின்குமாா், அழகுபொண்ணு, அருண்குமாா் ஆகியோரது கைப்பேசிகளை மீட்டெடுத்து, அவற்றில் உள்ள ஆதாரங்களை வெளிக்கொணர வேண்டும்.

இந்த வழக்கு தொடா்பாக அஜித்குமாா் தாய் மாலதி கொடுத்த 4 பக்கப் புகாா் மீது நடவடிக்கை இல்லை. வீண் பழியால் அஜித்குமாா் கொல்லப்பட்டாா். அவரது மரணத்துக்கு நீதிமன்றத்தால் மரியாதை கிடைத்துள்ளது.

எங்களது தரப்பில் இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் முடித்து தீா்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்துவோம் என்றாா் அவா்.

கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் 15 நாள்களில் நிறைவடையும்: பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் தகவல்

விருதுநகரில் நாளை திமுக இளைஞரணி தென் மண்டல நிா்வாகிகள் கூட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 3-வது நாளாக மறியல்

பாா்வையற்ற பள்ளி மாணவி இறந்த விவகாரம்: திருச்சி எஸ்.பி. தலைமையில் குழு அமைக்க உத்தரவு

சீன அதிபருடன் டிரம்ப் ஆலோசனை

SCROLL FOR NEXT