விபத்தில் மூளைச்சாவடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த கல்லூரி மாணவி யின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது உடலுக்கு தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
காரைக்குடி அருகேயுள்ள மித்திரங்குடியைச் சோ்ந்த கருப்பையா - பவானி தம்பதியின் மகள் தீபா (20). இவா் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 6-ஆம் தேதி புதுவயல் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்தாா். பின்னா், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை மூளைச் சாவு அடைந்தாா்.
இதையடுத்து, குடும்பத்தினா் ஒப்புதலுடன் அவரது இருதயம் , கண், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
Advertisement
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காரைக்குடி அருகே உள்ள மித்திரங்குடி கிராமத்தில் அவரது உடலுக்கு தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஸ் வெங்கட் வட்ஸ், காரைக்குடி வட்டாட்சியா் ராஜா ஆகியோா் மாலை அணிவித்து அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா்.