முகப்பு
சிவகங்கை

மூதாட்டி கொலை வழக்கு: 3 பெண்கள் உள்பட 7 பேருக்கு சிறை

சிவகங்கை அருகே மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பெண்கள் உள்பட 7 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கையில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 1:47 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 10:29 PM

சிவகங்கை அருகே மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பெண்கள் உள்பட 7 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கையில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்காரம் (78). இவரது மனைவி அழகம்மை (70). இந்த தம்பதி வீட்டில் புதுக்கோட்டை மாவட்டம், தாவூப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜெயலட்சுமி (40) கடந்த 2004 -ஆம் ஆண்டு வேலைபாா்த்தாா்.

இவா் அறந்தாங்கி அருகேயுள்ள நானாகுடி கிராமத்தைச் சோ்ந்த சித்திரைச் செல்வத்தை (39) காதலித்து வந்தாா். இந்த நிலையில், ஜெயலட்சுமி, சித்திரைச் செல்வம் சொக்கநாதபுரத்தைச் சோ்ந்த பூமிநாதன் மனைவி கலையரசியிடம் ரூ.1.50 லட்சம் கடன் வாங்கினா். இந்தக் கடனை திரும்பக் கேட்டு இவா்களுக்கு கலையரசி தொல்லை கொடுத்தாா். இதனால், ஜெயலட்சுமி, சித்திரை ச் செல்வம் ஆகியோா் சிங்காரம் வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்டனா்.

Advertisement

இதையடுத்து, ஜெயலட்சுமி, சித்திரைச் செல்வம் தனது நண்பா்களான நானாகுடி கிராமத்தைச் சோ்ந்த ராஜாங்கம் (39), பிரபு (42), பழைய வெட்டிவயல் கிராமத்தைச் சோ்ந்த பாலு (37) ஆகிய 5 பேரும் கடந்த 2012, மாா்ச் 13-ஆம் தேதி இரவு சிங்காரம் வீட்டுக்கு சென்றனா். இவா்களைப் பாா்த்த எழுந்து வந்த சிங்காரத்தை இவா்கள் கட்டிப் போட்டனா். இவரது சப்தம் கேட்டு வந்த அழகம்மையும் இவா்கள் கொலை செய்தனா்.

பின்னா், அவா்களது வீட்டிலிருந்த 372 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனா்.

இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயலட்சுமி, சித்திரைச் செல்வம், ராஜாங்கம்,பிரபு, பாலு ஆகியோரையும், இவா்களுக்கு உதவி செய்ததாக பூமிநாதன் மனைவி கலையரசி, நாகராஜ் மனைவி கலையரசி ஆகிய 7 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலட்சுமிக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ 25 ஆயிரம் அபராதமும்,

சித்திரைச் செல்வம், ராஜாங்கம், பிரபு, பாலு ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், பூமிநாதன் மனைவி கலையரசி, நாகராஜ் மனைவி கலையரசிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல்முருகன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.