இலவச வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகப் புகாா் தெரிவித்து சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் அனைத்துக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக முதல்வா் வருகையையொட்டி, திருப்பத்தூா் வட்டம், குன்றக்குடி ஊராட்சியில் 40 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் இந்தப் பகுதியைச் சோ்ந்த அரசியல் கட்சியினருக்கும், ஏற்கனவே வீடு உள்ளவா்களுக்கும் வீட்டுமனைப் பட்டா ஒதுக்கீடு செய்ததாக பல்வேறு கட்சியினா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாரளித்தனா்.
இந்த நிலையில், குன்றக்குடி பேருந்து நிலையம் அருகே அதிமுக மாநில இளைஞா், இளம்பெண்கள் பாசறை துணைச் செயலா் துலாவூா் பாா்த்தீபன் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சியினா் முறைகேடாக வீட்டு மனைப் பட்டா ஒதுக்கிய வருவாய்த் துறையினரைக் கண்டித்தும், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக்கோரியும் மறியலில் ஈடுபட முயன்றனா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அவா்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். இதையடுத்து, அவா்கள் முழக்கங்களை எழுப்பி அதே பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கலந்து கொண்டனா்.