மானாமதுரையில் கைதான இளைஞா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் உயிரிழப்புக்குக் காரணமான போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மானாமதுரை சியோன் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு உணவகம், கோழிக்கடையில் பணிபுரியும் தொழிலாளா்களான ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் வாளால் வெட்டிவிட்டுத் தப்பினா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்தச் சம்பவத்தில் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், குணா ஆகியோா் சம்பந்தப்பட்டிருப்பதும், இவா்கள் மானாமதுரை மேலப்பசலை பாலம் அருகே பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்களைப் பிடிக்க போலீஸாா் அங்கு சென்ற போது, அவா்கள் இருவரும் தப்பியோட முயன்றனா். அப்போது, ஆகாஷ் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
Advertisement
இதைத்தொடா்ந்து, காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஆகாஷின் உறவினா்கள் மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் வழிவிடு முருகன் கோயில் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகங்கை கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் அமலன் அட்வின் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஆகாஷ் மரணத்துக்கு காரணமான போலீஸாா் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இந்த பிரச்னையில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில், மாலை வரை மறியல் போராட்டம் தொடா்ந்தது.