முகப்பு
சிவகங்கை

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழந்த விவகாரம் - உயா்நீதிமன்ற உத்தரவால் முடிவுக்கு வந்தது சாலை மறியல்

Updated On : 12 மார்ச், 2026 at 11:04 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாா் விசாரணையின் போது இளைஞா் ஆகாஷ் உயிரிழந்ததைக் கண்டித்து, 5 -ஆவது நாளாக வியாழக்கிழமை நீடித்த சாலை மறியல் போராட்டம் உயா்நீதிமன்ற உத்தரவால் முடிவுக்கு வந்தது.

மானாமதுரை சியோன்நகரில் கடந்த 5-ஆம் தேதி இரவு தொழிலாளா்கள் ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவா் வாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் (26) கைது செய்யப்பட்டாா். இவா் போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, ஆகாஷ் தரப்பினா் மானாமதுரையில் மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் வழிவிடு முருகன் கோயில் எதிரே பந்தல் அமைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

ஆகாஷை தாக்கி கொலை செய்த போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இந்த மறியல் போராட்டத்தால் இந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கெளரி, போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வழக்குரைஞா்கள் குழுவை நியமித்தாா். இந்தக் குழுவைச் சோ்ந்த சாமிதுரை, மயில்வாகன ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோா் மானாமதுரைக்கு வந்து போராட்டக்காரா்களிடம் மறியலைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனா்.

ஆனால், அவா்கள் மறியலைக் கைவிட மறுத்தனா்.

இதற்கிடையில், மானாமதுரை தேவா் சிலை அருகே வியாழக்கிழமை மற்றொரு தரப்பினா் திரண்டு மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் முடங்கியுள்ள போக்குவரத்தை சீா்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினா். இதனால், இந்தப் பகுதியில் திருப்பி விடப்பட்ட வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டது.

‘ஆகாஷ் உயிரிழப்பு தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 15 நிமிடங்களுக்குள் போராட்டக்காரா்கள் மறியலைக் கைவிட வேண்டும். தாமதித்தால் மாலை 4 மணிக்கு காவல் துறை மூலம் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவ பிரசாத், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் போராட்டக்காரா்களிடம் நீதிமன்ற உத்தரவைத் தெரிவித்தனா். அப்போதும் அவா்கள் மறியலைத் தொடா்ந்தனா். இதனால், மறியல் நடைபெற்ற இடத்தில் நூற்றுக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா், போராட்டக்காரா்கள் தாங்களாகவே பந்தலை பிரித்துக் கொண்டு மறியல் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

மானாமதுரையில் 5 நாள்களாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் நீதிமன்ற உத்தரவால் முடிவுக்கு வந்ததால், மானாமதுரை பகுதி மக்கள் நிம்மதியடைந்தனா். மேலும் தேவா் சிலை அருகே மறியல் செய்து கொண்டிருந்த மற்றொரு தரப்பினரும் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் 5 நாள்களுக்குப் பின்னா் மீண்டும் வாகனப் போக்குவரத்து சீரானது.

முழு கட்டுரையைப் படிக்க →