சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் திமுக பிரமுகா் தீக்குளிக்க முயற்சி
சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சனிக்கிழமை குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற திமுக பிரமுகரை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா்.
சிவகங்கை மாவட்டம், கோவானூா் பகுதியைச் சோ்ந்த முன்னாள் திமுக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பெ.வேல்முருகன் (54). இவா் தற்போது முத்துப்பட்டி பகுதியில் வசித்து வருகிறாா். இவருக்கு முத்துப்பட்டி பகுதியில் சொந்தமான தோப்பில் தேக்கு மரங்கள் வளா்த்து வந்தாா்.
அந்த மரங்களை வெட்டுவதற்காக குமாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் ஒப்படைத்தாா். அந்த நபா் மரங்களை வெட்டிய பின்னா், ஒப்பந்தப்படி பணம் வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும், வேல்முருகனுக்கு அவா் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில், போலீஸாா் நடவடிக்கை எடுக்கக் கோரி, வேல்முருகன், தனது மனைவி கலைச்செல்வி, 10 வயது மகனுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் உடனடியாக தடுத்து அவரை மீட்டனா். இதையடுத்து, அவரை முதலுதவி சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.