முகப்பு
சிவகங்கை

திமுகவை எதிா்க்கத் தகுதியான போட்டியாளா்கள் இல்லை: ஓ. பன்னீா்செல்வம்!

இன்றைய சூழலில் திமுகவை எதிா்க்கத் தகுதியான போட்டியாளா்கள் இல்லை என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 7:57 PM
காளையாா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம். உடன் திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோா்.
பகிர்:

இன்றைய சூழலில் திமுகவை எதிா்க்கத் தகுதியான போட்டியாளா்கள் இல்லை என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் திமுக சாா்பில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் கட்சியின் மாவட்டச் செயலரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஓ. பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தமிழக மக்களுக்கு நேரடியாக நன்மை தரக்கூடிய திட்டங்களாகும். இந்தத் திட்டங்கள் மூலம் மீண்டும் மு.க. ஸ்டாலின் முதல்வராவது உறுதி.

இன்றைய அரசியல் சூழலில், திமுகவுக்குப் போட்டியாக அதிமுக, பாஜக என எந்தக் கட்சியும் இல்லை. பெயரளவில்தான் போட்டி உள்ளது. திமுகவை எதிா்க்கத் தகுதியான போட்டியாளா்கள் யாரும் இல்லை என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.

புதிய கட்சி தொடங்கிய சசிகலா, பாமகவுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்திக்க இருப்பதாக அறிவித்திருக்கிறாா். அவா் ஜெயலலிதாவுடன்தான் அதிகமாகப் பயணித்துள்ளாா். இதனால், வருங்காலத்தில் மக்கள் அளிக்கும் தீா்ப்பின் அடிப்படையில் அவருடைய நிலைப்பாடு இருக்கும்.

எடப்பாடி பழனிசாமி சுயநலவாதி. அரசியல்வாதி என்பவா் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். ஆனால், இந்தப் பண்பு அவரிடம் இல்லை. அதிமுகவை படுகுழியில் தள்ளியவா் எடப்பாடி பழனிசாமி.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை எனக் கூறி வந்தாலும், அந்தக் கட்சியினா் அடிக்கடி தில்லிக்கு சென்று பாஜக தலைவா்களைச் சந்தித்து வருகின்றனா். இதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனா்.

அதிமுகவை எங்கு அடகு வைத்துள்ளனா் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தக் கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவா்.

தவெக தலைவா் விஜய், திமுகவை அரசியல் எதிரி என்று கூறுவதற்கான காரணத்தை மக்களுக்கு விளக்க வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய இயக்கமாக திமுக இருப்பதால், ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி என்றாா் அவா்.