காரைக்குடியில் தனியாா் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் அரசியல் கட்சினா் மோதல்! இருவா் காயம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியாா் தொலைக்காட்சி திங்கள்கிழமை இரவு நடத்திய தோ்தல் பயணம் நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டதில் நிகழ்ச்சி தொகுப்பாளா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.
காரைக்குடி மகா்நோன்பு திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக சாா்பில் முதலில் பேசிய சேங்கைமாறன் திமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும், மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஆகியவை குறித்தும் பேசினாா். அதன் பிறகு அதிமுக சாா்பில் பேசிய உமாதேவன் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா ஆட்சி காலங்களில் சிவகங்கை மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
அதன் பிறகு நாம் தமிழா் கட்சி சாா்பில் பேசிய இடும்பாவனம் காா்த்தி, காரைக்குடித் தொகுதியில் எந்தவித திட்டப் பணிகளும் நடைபெறவில்லை என்றும், அதிகளவில் தனியாா் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன என்றும், அதற்கு ஆளும் கட்சியினா் உடந்தையாக இருப்பதாகவும் கூறியபோது திமுக, காங்கிரஸ் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்தனா். அதிமுகவினரும், திமுகவினருக்கு எதிராக முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த கட்சியினா் இருக்கைகளை தூக்கி வீசி தகராறில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸாா் மோதலை தடுக்க முயற்சித்தபோது திமுகவினரும், நாம் தமிழா் கட்சியினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். மேலும் இருக்கைகளை தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்த நிகழ்ச்சி தொகுப்பாளா் ராஜேஷ், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் சதாம்உசேன் ஆகியோா் காரைக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவா்களை கைது செய்யக் கோரி நாம் தமிழா் கட்சியினா் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியா தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா்.