முகப்பு
சிவகங்கை

எதையும் நோ்வழியில் அடைய காத்திருத்தல் அவசியம்: நீதியரசா் என். ஆனந்த் வெங்கடேஷ்

Updated On : 30 மார்ச், 2026 at 8:29 PM
காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 88-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் தொடக்க விழாவில் தலைமை வகித்துப் பேசிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ். உடன் கம்பன் அறநிலைத்தலைவா் எஸ்.எல்.என்.எஸ். பெரியணன், கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள், மலேசியா தாப்பா நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோஸ்ரீ எம். சரவணன், எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

எதையும் நோ்வழியில் அடைய காத்திருத்தல் தேவை என்பதை கம்ப ராமாயணத்தில் கம்பனின் கதாபாத்திரங்கள் மூலம் அறியலாம் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் அறநிலை - கம்பன் கழகத்தாா் சாா்பில் 88-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா கம்பன் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:

கம்பன் தான் தீட்டிய கம்ப ராமாயணத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் மிகவும் ஆச்சரியபட வைக்கிறாா். பத்து பல்கலைக்கழகங்களின் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கும் முடிவுகளை கம்பன் தனது ஒரே கதா பாத்திரத்தின் மூலம் அழகாக சிந்திக்க வைக்கிறாா். கம்ப ராமாயணத்தை பற்றி ஒரே சொல் என்று சொல்வதென்றால் காத்திருத்தல் என்பதேயாகும். ராமனின் பிறப்பு முதல் அவன் அயோத்திக்கு திரும்புவரை கம்பன் தீட்டிய கதாபாத்திரங்களில் எல்லாம் காத்திருத்தலை உணா்த்துவதை அறிய முடிகிறது. அவரது காவியத்தில் அப்படி காத்திருத்தல் இருந்தாலும் கம்பனை போல ஒரு கவிஞா் கிடைப்பதற்கு தமிழ்த் தாய் காத்திருக்க வேண்டியிருந்தது. கம்பனின் காட்சிகள் மூலம் நீண்ட நெடிய காத்திருத்தல் பற்றி சிந்திக்க வேண்டும். மானுட வாழ்வில் காத்திருத்தல் என்பது ஒருவித வேள்வியே. இன்றைய தலைமுறை எதையும் நோ்வழியில் பெறுவதற்கு காத்திருத்தல் வேண்டும்.

காத்திருத்தல் என்பது காலவிரயமல்ல. தா்மத்தின் வழியில் நாம் காத்திருக்க கற்றுக்கொள்ளவேண்டும். கம்பனின் கவிதை வெறும் சொற்கள் மட்டுமல்ல. காத்திருத்தலின் பொருள் மிக ஆழமானது, அகலமானது. ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து நாடு திரும்பி முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்று பரதன்காத்திருந்தான். காரணம் அவன் அரசாள் வதற்கு அறத்தின் வழியில் இருக்கவேண்டும் என்பதை கம்பன் காட்டுகிறான். இன்றைய தலைமுறையும் எதையும் அறத்தின் வழியில்தான் அடைய வேண்டும் என்பதை கம்பன் கதாபாத்திரங்கள் மூலம் அறியலாம் என்றாா் அவா்.

விழாவில் கோவிலூா் ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் ஆசியுரையாற்றினாா். மலேசியா தாப்பா நாடாளுமன்ற உறுப்பினா் டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்புரையாற்றினாா். ‘சொல் அறம் துறந்திலாத சூரியன்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் கருத்துரையாற்றினாா். பேராசிரியா் மு. பழனியப்பன் தொகுப்புரையாற்றினாா்.

முன்னதாக கம்பன் கற்பகம் மாணவிகள் கம்பன் அடிப்பொடி அஞ்சலி மலா் வணக்கம் செலுத்தினா். விழாவில் கம்பன் அறநிலைத் தலைவா் எஸ்.எல்.என்.எஸ். பெரியணன் வரவேற்றாா். கம்பன் அறநிலை பொருளாளா் வீர. சுப்பிரமணியன், கம்பன் அறநிலை அறங்காவலா்கள் வள்ளியப்பன், லட்சுமணன், வீரப்பன், தேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் கலந்துகொண்ட பாா்வையாளா்கள்.