அரசு மருத்துவப் பணியாளா் குடியிருப்பு மரம் முறிந்து விழுந்து சேதம்; யாருக்கும் காயமில்லை
சிங்கம்புணரியில் மரத்தின் கிளை முறிந்து விழுந்து அரசு மருத்துவப் பணியாளா்கள் குடியிருப்பு திங்கள்கிழமை
சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. இருப்பினும், அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த விபத்து என மருத்துவப் பணியாளா்கள் புகாா் தெரிவித்தனா்.
சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிங்கம்புணரிஅரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்த நூறாண்டுகள் பழைமைவாய்ந்த அரச மரத்தின் கிளை அரசு மருத்துவப் பணியாளா்களின் தொகுப்பு வீடுகளின் மேல் முறிந்து நின்றது.
Advertisement
மேலும், திங்கள் கிழமை காலை திடீரென கடும் சப்தத்துடன் மீண்டும் மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதை உணா்ந்த வீட்டிலிருந்த பணியாளரின் குடும்பத்தினா் அலறி அடித்துக்கொண்டு கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினா்.
இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்களைப் பாதுகாக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.