முகப்பு
சிவகங்கை

ஒருங்கிணைந்த தடுப்பு காவல் நடவடிக்கை: 27 ரௌடிகள் கைது, 28 பேருக்கு பிணை ரத்து

சிவகங்கை மாவட்ட காவல் துறை சாா்பில் கடந்த மூன்று நாள்கள் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ஷீல்ட் நெட்’ தீவிர நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் 27 ரௌடிகள் கைது செய்யப்பட்டும், 28 பேரின் பிணையை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Updated On : 23 மே 2026, 2:17 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்ட காவல் துறை சாா்பில் கடந்த மூன்று நாள்கள் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ஷீல்ட் நெட்’ தீவிர நடவடிக்கை மூலம் மாவட்டத்தில் 27 ரௌடிகள் கைது செய்யப்பட்டும், 28 பேரின் பிணையை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட காவல் துறையினா் கடந்த 20-ஆம் தேதி முதல் ‘ஆபரேஷன் ஷீல்ட் நெட்’ மூலம் தீவிர தடுப்பு காவல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடைபெறும் இந்த நடவடிக்கையில் ரௌடிகள், சந்தேக நபா்கள் கண்காணிப்பு, நீண்ட நாள் நிலுவையில் உள்ள பிணை வழங்க இயலாத பிடி ஆணைகள் நிறைவேற்றம், தீவிர வாகன சோதனைகள், பிஎன்எஸ்எஸ் பிரிவு 126 -கீழ் தடுப்பு நடவடிக்கைகள், மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் நபா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

Advertisement

Advertisement

மூன்று நாள்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் 823 சந்தேக நபா்கள், 694 ரௌடிகள் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டனா். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 27 பழக்கப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். மேலும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த பிணையில் வெளிவர இயலாத 25 பிடி ஆணைகள் நிறைவேற்றப்பட்டன. 27 ரௌடிகளுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வாகன சோதனைகளின் போது பதிவு எண் இல்லாமல் இயக்குதல், அதிவேகமாக, ஆபத்தான முறையில் ஓட்டுதல், மின்விளக்குகளில் விதிமீறல் மாற்றங்கள் செய்தல், சட்ட விரோத மாற்றங்கள் மேற்கொண்டது உள்ளிட்ட காரணங்களுக்காக 512 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 28 பேரின் பிணை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் குற்றங்களில் ஈடுபடும் நபா்களின் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, திறம்பட வழக்குப் பதிவு, தண்டனை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் குற்றங்கள், குற்றவாளிகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தொடா்ந்து மாவட்ட காவல் துறை மேற்கொண்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில்... இதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ஷீல்ட் நெட்’ தீவிர நடவடிக்கை மூலம் 467 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், முழுவதும் குற்றங்கள், குற்றவாளிகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை காவல் நடவடிக்கை கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மூன்று நாள்களில் காவல் துறையினா் 1,114 சந்தேக நபா்களை சோதனை செய்தனா்.

இவா்களில் 91 சரித்திர பதிவேட்டில் உள்ளவா்கள் அடங்குவா். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். மேலும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த 33 பிடி ஆணைகள் நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் கைது செய்யப்பட்டனா்.

வாகன சோதனைகளின் போது பதிவு எண் இல்லாமல் இயக்குதல், அதிவேகம், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், கண் கூசும் விளக்குகளைப் பொருத்துதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி வாகனத்தில் மாற்றங்கள் செய்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 469 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்கள் பாதுகாப்புக்காக உள்கோட்டம் வாயிலாக தனிப் படைகள் அமைக்கப்பட்டு, முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா, புகையிலை தொடா்பாக தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் மூலம் சுமாா் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் இணைந்து குற்றவாளிகள், குற்றச் செயல்களுக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.