முல்லைப் பெரியாற்றில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளதால், முல்லைப் பெரியாற்றில் இருந்து பி.டி.ராஜன் கால்வாய், தந்தை பெரியார்
முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளதால், முல்லைப் பெரியாற்றில் இருந்து பி.டி.ராஜன் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் மற்றும் 18-ஆம் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 127.10 அடியாக இருந்த நிலையில், கடந்த 2017, செப்.25-ல் தேனி மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்கு, அணையில் இருந்து முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி மாவட்டத்தில் 14, 707 ஏக்கர் பரப்பளவில் முதல் போக நெல் சாகுபடி தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வைகை அணை நீர்மட்டம் புதன்கிழமை (நவ.1) 55.64 அடியாக உயர்ந்திருந்த நிலையில், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் பகுதிகளில் 45,041 ஏக்கர் பரப்பளவில் உள்ள இருபோக சாகுபடி நிலங்களின், முதல் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்ட பாசனத்துக்கு கடந்த செப். 25-ஆம் தேதி முதல் தொடர்ந்து 120 நாள்கள் வரையும், வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசன நிலங்களுக்கு நவ.1-ம் தேதி முதல் தொடர்ந்து 120 நாள்கள் வரையும் தண்ணீர் திறக்க வேண்டும். இந்நிலையில், வடகிழக்கு பருவழை தீவிரமடைந்து முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ளதால், தேனி மாவட்டத்தில் கால்வாய் பாசன நிலங்கள் பயனடையும் வகையில், முல்லைப் பெரியாற்றில் இருந்து பி.டி.ராஜன் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் மற்றும் 18-ஆம் கால்வாய்களில் விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பி.டி.ராஜன் மற்றும் தந்தைப் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறப்பதால் தேனி மாவட்டத்தில் சின்னமனூர், வேம்பம்பட்டி, சீப்பாலகோட்டை ஆகிய பகுதிகளில் 830 ஏக்கர் பரப்பளவிலும், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 4,316 ஏக்கர் பரப்பளவிலும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்தக் கால்வாய்கள் மூலம் 27 குளங்களில் தண்ணீர் தேக்கப்படுவதால், சுற்றியுள்ள பாசனக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதால் உத்தமபாளையம் வட்டாரத்தில் 4,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 18-ஆம் கால்வாய் மூலம் 44 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படுவதால், சுற்றியுள்ள 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனக் கிணறுகளில் நீர் சுரக்கும் வாய்ப்பு உள்ளது.
அரசு உத்தரவின்படி, நடப்பு காரீப் பருவத்தில் முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணை ஆகிய இரு அணைகளிலும் சேர்ந்து மொத்தம் 6,250 மில்லியன் கன அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பில் இருந்தால், முல்லைப் பெரியாற்றில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்கலாம். எனவே பி.டி.ராஜன் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் மற்றும் 18-ஆம் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கால்வாய்களில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை கண்மாய்கள் வரை சென்றடைவதற்கு வாய்ப்பாக கால்வாயை சீரமைக்கவும், வரத்து வாய்க்கால்களில் வீசப்பட்டுள்ள பயிர் கழிவுகளை அப்புறப்படுத்தவும் பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.