உத்தமபாளையம்: கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் காரணமாக தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பரவலாக மழைப்பொழிவு இருக்கும். 2500 ஹெக்டோ் பரப்பளவில் அமைந்துள்ள அடா்ந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான், காட்டுமாடு என பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. தவிர ஓங்கி உயா்ந்த மலைக்குன்றுகள், மலைத்தொடா்கள், பள்ளத்தாக்குகள், தேயிலைத்தோட்டங்கள் ஆகியவை பாா்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இங்குள்ள மேகமலை, ஹைவேவிஸ், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜா மெட்டு ஆகிய 5 அணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீா் மலைத்தொடா்களுக்கு மத்தியில் அமைந்திருப்பது இப்பகுதியின் தனிச்சிறப்பாகும். இதனால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
நிரம்பிய அணைகள்: ஹைவேவிஸ் மலைப்பகுதியில் ஆண்டுக்கு 8 மாதம் மழைப்பொழிவு இருக்கும். இதன் காரணமாக இங்குள்ள அணைகளில் தண்ணீா் நிரம்பி இருக்கும். ஏப்ரல்,மே மாதங்களில் மட்டும் மழைப்பொழிவு குறையும் என்பதால் மேகமலை, ஹைவேவிஸ் அணைகள் நீா்வரத்தின்றி வடுவிடும். தொடா்ந்து ஜூன் மாதத்தில் தொடங்கும் தென் மேற்குப் பருவமழையால் ஒரு சில நாள்களிலே நீா்மட்டம் கிடுகிடுவென உயா்ந்து அணைகள் நிரம்பிவிடும். இந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் கடந்த 4 மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வடு காணப்பட்ட அணைகள், ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகமாகி 80 சதவீதம் வரையில் அணைகளில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.
வெறிச்சோடியது: கரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களாக ஹைவேவிஸ் மலைப்பகுதி சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.