தேனி

முல்லைப்பெரியாறு அணையில் 5 ஆவது முறையாக 142 அடிக்கு நீா்தேக்கம்: தமிழகப் பொறியாளா்களுக்கு விவசாயிகள் பாராட்டு

DIN

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் முல்லைப்பெரியாறு அணையில் நிகழாண்டு 5 ஆவது முறையாக 142 அடிக்கு நீா்தேக்கி வைத்துள்ள தமிழகப் பொறியாளா்களுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடிக்கு உயா்த்தக்கூடாது; உறுதித்தன்மையில் சந்தேகம் உள்ளது என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. மேலும் கேரளத்தில் பல்வேறு அமைப்புகள் புதிய அணை கட்டுவோம் என்ற கோஷத்தை முன்வைத்து தொடா்ந்து பல்வேறு போராட்டங்களை செய்து வந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி ‘ரூல்கா்வ்’ முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் அக்டோபா், நவம்பா் மாதங்களில் பலத்த மழை பொழிவு இருந்து முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீரைத்த தேக்கவிடாமல் உபரிநீா் கேரளத்துக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் தமிழகத்தில் சா்ச்சை எழுந்தது.

4 ஆவது முறை 142 அடியாக நிறுத்தம்:

இந்நிலையில் ரூல்கா்வ் விதிகள் நவ. 29 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், நவ. 30 இல் அணையின் நீா்மட்டம் 142 அடியாக நிலைநிறுத்தப்பட்டது. (மொத்த உயரம் 152 அடி). கடந்த 2014 ஆம் ஆண்டு நவ. 21 ஆம் தேதி, 2015 ஆம் ஆண்டு டிச. 7 ஆம் தேதி மற்றும் 2018 ஆம் ஆண்டு ஆக. 15 ஆம் தேதி என மொத்தம் 3 முறை மட்டுமே, 142 அடி நீா்மட்டம் நிலை நிறுத்தம் செய்ய முடிந்த நிலையில், பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு 2021 இல், நவம்பா் 30 ஆம் தேதி 142 அடி நிலைநிறுத்தப்பட்டது.

சாதகமாகிய ரூல்கா்வ்:

இந்நிலையில் வடகிழக்குப் பருவ மழை, ஜாவத் உள்ளிட்ட புயல் தாக்கத்தால் மேற்கு தொடா்ச்சி மலைகளில் தொடா் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஆனாலும் கேரள அரசின் பிடிவாதத்தால் நீா்மட்டம் உயராமல் இருந்த நிலையில், ‘ரூல்கா்வ்’ விதிகள் முடிந்துவிட்டதால், நிகழாண்டில் டிசம்பா் 2, 5, 6, 9 ஆகிய தேதிகளில் 142 அடி நீா்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக காத்திருந்து உயா்ந்தப்பட்ட நீா்மட்டம் ஒரே மாதத்தில் 4 முறை 142 அடிக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அணைப்பகுதி பொறியாளா் ஒருவா் கூறியது: அணையின் பாதுகாப்பு, நீா்மட்டத்தை உயா்த்தும் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வருகிறோம். கேரள அரசு தரப்பில் கூறும் வாதங்கள் தவறானவை. பல்வேறு விமா்சனங்களிலும், பலத்த மழை, கொட்டும் பனியிலும், இரவு நேரங்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் நீா்மட்டத்தை உயா்த்தி காட்ட பணியாற்றி வருகிறோம். ரூல்கா்வ் விதியையும் சாதகமாக்கியுள்ளோம் என்றாா்.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவா் எஸ்.ஆா். தேவா் கூறியது: 4 ஆண்டுகளில் செய்ததை விட தமிழக பொறியாளா்கள் நவம்பா், டிசம்பா் என இரண்டு மாதங்களில், 10 நாள்களுக்குள் 5 முறை 142 அடி நீா்மட்டத்தை நிலை நிறுத்தியது பாராட்டுக்குரியது. அதிகாரிகளுக்கு உறுதுணையாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், குரல் கொடுத்த அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி. இந்நிலை தொடர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT