சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல், பழனி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல், பழனி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது.
இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கைலாசநாதருக்கு சிறப்பு பூஜை:
பழனி மலைக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி கைலாசநாதா் சன்னிதி உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, பெரியாவுடையாா் கோயில், சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்து விநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னிதி, சன்னிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனா்.
போடியில்...
தேனி மாவட்டம் போடி பிச்சங்கரை மலைக்கோயிலில் கீழச்சொக்கநாதா், மேலச்சொக்கநாதா் கோயில்களிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
போடி பழைய பேருந்து நிறுத்தம் கொண்டரங்கி மல்லையசாமி திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சிவலிங்க பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் சிவலிங்கப் பெருமானுக்கு உத்திராட்ச மாலை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.