சித்திரைத் திருவிழா: வைகை அணை திறப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் வெள்ளிக்கிழமை முதல் திறந்துவிடப்பட்டது.
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காகவும், குடிநீா்த் திட்ட கிணறுகளில் தண்ணீா் சுரப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பாகவும் வெள்ளிக்கிழமை முதல் ஏப்.23-ஆம் தேதி வரை வைகை அணையிருந்து மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வைகை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு ஆற்றில் விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி வரை வைகை ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படும் என்று வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறினா்.
Advertisement
அணை நிலவரம்:
வைகை அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 59.19 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து இல்லை. அணையிலிருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 72 கன அடியும், மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, விநாடிக்கு 1,000 கன அடியும் என மொத்தம் விநாடிக்கு 72 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.