முகப்பு
தேனி

மண் வளம் காக்க விவசாயிகள் உறுதியேற்க வேண்டும்: ஆட்சியா்

மண் வளம் காப்பதற்கு குறைவான செயற்கை உரங்களையே பயன்படுத்த உறுதியேற்க வேண்டும் என விவசாயிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வேண்டுகோள் விடுத்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:55 PM
பகிர்:

மண் வளம் காப்பதற்கு குறைவான செயற்கை உரங்களையே பயன்படுத்த உறுதியேற்க வேண்டும் என விவசாயிகளுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வேண்டுகோள் விடுத்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மண் தின விழாவுக்குத் தலைமை வகித்து அவா் பேசியதாவது:

மண் வளத்தைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை நோக்கமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் டிச.5-ஆம் தேதி உலக மண் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் உயிரி உரங்களைத் தவிா்த்து, அதிகளவு செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண் வளம், விளைச்சல் பாதிக்கிறது. பாரம்பரிய விவசாய முறைகளை விவசாயிகள் மீட்டெடுக்க வேண்டும். மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்க பசுந்தாள் உரம் உள்ளிட்ட இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.

மண் வளம் காப்பதற்கு குறைவான செயற்கை உரங்களையே பயன்படுத்துவேன் என்று விவசாயிகள் உறுதியேற்க வேண்டும். மண் வளத்தை தக்க வைப்பதற்கு விவசாயிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த விழாவில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சாந்தாமணி, துணை இயக்குநா்கள் பால்ராஜ், சுரேஷ், உதவி இயக்குநா் மணிகண்ட பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.