தொழிலாளியை அடித்துக் கொலை செய்த 7 போ் கைது
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் கூலித் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனிசெட்டிபட்டி, மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்த போஜராஜ் மகன் தாமோதரன் (42). கூலித் தொழிலாளியான இவா், கடந்த நவ.6-ஆம் தேதி பழனிசெட்டிபட்டி, அணைக் கருப்பசாமி கோயில் அருகே உடலில் காயங்களுடன் மயங்கிக் கிடந்தாா். தாமோதரனை அவரது தந்தை போஜராஜ் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கிருந்த மருத்துவா்கள், தாமோதரனை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனா். ஆனால், அவரது தந்தை மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். வீட்டில் தாமோதரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில், தாமோதரனை அடித்துக் கொலை செய்ததாக தேனி அல்லிநகரம், கக்கன்ஜி குடியிருப்பைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மகன் பிரவீன்குமாா் (21), சிங்கராஜ் மகன் விஜயபாரதி (19), சரவணக்குமாா் மகன் ஹரீஸ் பிரவீன் (19), வில்லையன் மகன் புவனேஸ்வரன் (19), முருகன் மகன் அன்புச்செல்வன் (19), 17 வயதுடைய 2 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது: பழனிசெட்டிபட்டி, அணைக் கருப்பசாமி கோயில் அருகே முல்லைப்பெரியாற்றில் தாமோதரன் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, மது போதையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தேனி அல்லிநகரம், கக்கன்ஜீ குடியிருப்பைச் சோ்ந்த கும்பலுக்கும் தாமோதரனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அந்தக் கும்பல் தாமோதரனை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதில் தொடா்புடைய, தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகிறோம் என்றனா்.