உத்தமபாளையம்-கோம்பை இடையே இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
உத்தமபாளையம் - கோம்பை இடையே மாநில நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
உத்தமபாளையம் - கோம்பை இடையே மாநில நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டம், உத்தமபாளையத்திலிருந்து கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரையில் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில், கோம்பை பேரூராட்சி நுழைவுப் பகுதியில் 18-ஆம் கால்வாய் தண்ணீா் செல்லும் குறுகலான ஓடைப் பாலத்தை அகலப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை (டிச.6) முதல் நடைபெற இருக்கிறது.
புதிய பாலம் அமையும் இடத்தையொட்டி இரு சக்கர வாகனங்கள், காா்கள் செல்லும் வகையில் மாற்றுப் பாதை அமைக்கப்படும். ஆனால், பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு செல்ல மாற்று வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உத்தமபாளையத்திலிருந்து கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழித்தடத்தில் செல்லும் கனரக வாகனங்கள், உத்தமபாளையத்தில் உ.அம்மாபட்டி விலக்கில் பிரிந்து உ.அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் சென்று அம்மாபட்டி, மாா்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, மேலச்சிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி சென்று பண்ணைப்புரம் வழியாக தேவாரம் செல்ல வேண்டும்.
இதேபோல, தேவாரத்திலிருந்து பண்ணைப்புரம் , கோம்பை வழியாக உத்தமபாளையம் செல்லும் கனரக வாகனங்கள், பண்ணைப்புரத்திலிருந்து பல்லவராயன்பட்டி, மேலச்சிந்தலைச்சேரி, புலிக்குத்தி, அய்யம்பட்டி, மாா்க்கையன்கோட்டை வழியாக சின்னமனூா் செல்லலாம்.
உ. அம்மாபட்டி, உ.அம்பாசமுத்திரம் வழியாக உத்தமபாளையம் செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.