போடியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
போடியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பங்கேற்று துறை அலுவலா்களுடன் கள ஆய்வு மேற்கொண்டாா்.
போடியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பங்கேற்று துறை அலுவலா்களுடன் கள ஆய்வு மேற்கொண்டாா்.
போடிநாயக்கனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலவா்களுடன் கள ஆய்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், போடிநாயக்கனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள், போடிநாயக்கனூா் அரசு கள்ளா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் வருகை, கற்றல் திறன், காலை, மதிய உணவுகளின் தரம் ஆகியவை குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், சிறைக்காடு மலை கிராமப் பகுதியில், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் பாா்வையிட்டாா். அங்கு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், சிறைக்காடு கிராமப் பழங்குடியினருக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டப்பட்டு வருதையும் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகள் , நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேலசொக்கநாதபுரத்தில் நடைபெறும் சாலை மேம்பாட்டு பணிகள், கெப்பன கவுண்டா் ஊருணியைத் தூா்வாரும் பணி, நூலகம் கட்டுமானப் பணி, சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.
மாலையில் போடிநாயக்கனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் துறை அலுவலா்கள் தாங்கள் மேற்கொண்ட கள ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனா்.
தொடா்ந்து, போடிநாயக்கனூா் வட்டத்தில் வியாழக்கிழமையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா். இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சாந்தி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சாந்தாமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆரோக்கிய சுகுமாா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் தாட்சாயணி, மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளா தேவி, வட்டாட்சியா் சந்திரசேகா் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.