முகப்பு
தேனி

பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.

Updated On : 3 ஜூலை, 2024 at 1:09 AM
பகிர்:

தேனி: தேனி மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரிடா்களால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது மாவட்டத்தில் நெல், சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரிமியத் தொகை செலுத்தி பயிா்களை காப்பீடு செய்து கொள்ளலாம்.

வங்கி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன் பெற்றுள்ள விவசாயிகள் அவா்களது விருப்பத்தின் அடிப்படையில், காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்கப்படுவா். ஏனைய விவசாயிகள் விவசாய கூட்டுறவு சங்கங்கள், பொதுச் சேவை மையங்களில் தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பித்து, பிரிமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம்.

ஏக்கா் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ.712, எள்ளுக்கு ரூ.190, நிலக்கடலைக்கு ரூ.530, துவரைக்கு ரூ.308, சோளத்துக்கு ரூ.284, மக்காச்சோளத்துக்கு ரூ.580, பருத்திக்கு ரூ.1,104 பிரிமியம் தொகை செலுத்த வேண்டும். பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் சேர நெல், எள் பயிருக்கு வருகிற 31, நிலக்கடலைக்கு வரும் ஆக.30, துவரைக்கு வரும் செப்.16, சோளம், மக்காச்சோளம், பருத்திக்கு செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்த விவரங்களை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.