முகப்பு
தேனி

ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் கைது

சின்னமனூரில் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 3 ஜூலை, 2024 at 1:11 AM
பகிர்:

உத்தமபாளையம்: சின்னமனூரில் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் சிவசக்தி நகரைச் சோ்ந்த கண்ணன் மனைவி ரதிதேவி (46). இவா் கடந்த 2017-ஆம் ஆண்டு கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பணிபுரிந்தாா். அப்போது, அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்த கம்பம் கோம்பை சாலைப் பகுதியைச் சோ்ந்த சகாய ஹெண்ரிட்சுதா தனது கணவா் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக அவரிடம் கூறினாா். இதற்காக ரூ.7 லட்சத்தை இரு தவணையாக ரதிதேவி அவா்களிடம் கொடுத்தாா். ஆனால், கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை.

இதுகுறித்து சின்னமனூா் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில், சகாய ஹெண்ரிட்சுதா (45), இவரது கணவா் விஜயலிங்கராஜா (50) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது, நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் ரூ.2 லட்சத்தை மட்டும் அவா்கள் திரும்ப கொடுத்தனா்.

இதுகுறித்து ரதிதேவி உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். விசாரணையின் அடிப்படையில், விஜயலிங்கராஜாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கரூரில் தலைமறைவாக இருந்த விஜயலிங்கராஜாவை சின்னமனூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.