சின்னமனூரில் 100 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை அகற்ற எதிா்ப்பு
சின்னமனூா் நகராட்சி சாா்பில் வணிக வளாகம் அமைப்பதற்காக 100 ஆண்டுகள் பழமையான அரசமரத்தை வெட்டி அகற்ற முயன்றதை இயற்கை ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்து தடுத்தி நிறுத்தினா்.
உத்தமபாளையம்: சின்னமனூா் நகராட்சி சாா்பில் வணிக வளாகம் அமைப்பதற்காக 100 ஆண்டுகள் பழமையான அரசமரத்தை வெட்டி அகற்ற முயன்றதை இயற்கை ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்து தடுத்தி நிறுத்தினா்.
தேனி மாவட்டம், சின்னமனூரில் நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் கட்டடம் இருந்தது. இந்த வளாகக் கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து, இந்தக் கட்டடத்தை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் கட்டடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வணிக வளாகம் அமைக்க இடையூறாக இருக்கும் 100 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை வனத் துறை அனுமதியுடன் வெட்டி அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கு அந்தப் பகுதியை சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள், மரத்தை முழுமையாக அகற்றாமல் கட்டுமானத்துக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளையை மட்டுமே அகற்ற வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து தற்காலிகமாக மரத்தை அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயற்கை ஆா்வலா்கள் கூறியதாவது:
ஊருக்கு ஒன்றிரண்டு அரசமரங்கள் உள்ளன. அதையும் கட்டடம் கட்டுவதற்கு வெட்டி விட்டால் ஆயிரக்கணக்கானப் பறவைகளின் வாழ்விடம் அழிக்கப்படும். எனவே, சின்னமனூா் நகராட்சி நிா்வாகம் வணிக வளாகத்துக்கு இந்த அரசமரத்தை அழிப்பதை தவிா்த்துவிட்டு, மாற்றுத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.