முகப்பு
தேனி

வருவாய்த் துறை அலுவலா்கள் இரவிலும் காத்திருக்கும் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் இரவிலும் காத்திருக்கும் போராட்டத்தைத் திங்கள்கிழமை தொடங்கினா்.

Updated On : 5 மார்ச், 2024 at 5:00 AM
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா்கள்.
பகிர்:

தேனி: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் இரவிலும் காத்திருக்கும் போராட்டத்தைத் திங்கள்கிழமை தொடங்கினா். துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பணியிறக்க பாதுகாப்பு அரசாணை வெளியிட வேண்டும், வருவாய்த் துறையில் உதவியாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலை ஊழியா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும், உங்கள் ஊரில், உங்களைத் தேடி, மக்களுடன் முதல்வா் உள்ளிட்ட அரசின் திட்டங்களைச் செயல்படுத்த வருவாய்த் துறையினருக்கு பணி நெருக்கடி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் வருவாய்த் துறை அலுவலா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். பகல் நேரத்தில் மட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கு,ராமலிங்கம் தலைமையில் இரவில் காத்திருக்கும் போராட்டத்தைத் தொடங்கினா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் இரவு 8 மணிக்கு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.