முகப்பு
தேனி

மூணாறு அருகே சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 போ் பலி

Updated On : 20 மார்ச், 2024 at 4:18 AM
கேரள மாநிலம், மூணாறில் 200 அடி பள்ளத்தில் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்.
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 10:32 PM

கம்பம்: தமிழகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம், மூணாறுக்கு சென்ற சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தை உள்பட 4 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தினா் அவா்களது முகவா்கள், விற்பனையாளா்களுக்கு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தனா். இதையடுத்து, 50-க்கும் மேற்பட்டவா்கள் 2 வேன்களில் கேரள மாநிலத்துக்குச் சென்றனா்.

பின்னா், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மூணாறுக்கு வந்து கொண்டிருந்த போது, மாங்குளம் - ஆனங்குளம் மலைச் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் மூணாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். மீட்புப் பணியில் மூணாறைச் சோ்ந்த பொதுமக்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், மருத்துவக் குழுவினா், காவல் துறையினா் ஈடுபட்டனா்.

Advertisement

இந்த விபத்தில் தேனியைச் சோ்ந்த குணசேகரன் (70), டைல்ஸ் கடை உரிமையாளா் பி.கே. சேது (50), அபினேஷ் -சரண்யா தம்பதியின் மகன் தன்விக் (2) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்தில் அபினேஷ் (30), சரண்யா (24), ஆறுமுகம் (63), வைகா (9), கீதா (30), ரன்வீா் (6), சந்தியா வள்ளி (35), பிரசன்னா (39), தேவ்வசந்த் (9), ஜோதிமணி (65), அன்னபுஷ்பம் (55), திவ்யா (24), வேன் ஓட்டுநா் உப்பிலிராஜ் (36) ஆகிய 13 போ் காயமடைந்தனா். இவா்கள் அடிமாலி, தொடுபுழா அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் அபினேஷ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மூணாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.