முகப்பு
தேனி

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்: 105 பேருக்கு 39 கோடி கடனுதவி

தேனி ஆட்சியா் தகவல்

Updated On : 28 நவம்பர், 2024 at 11:55 PM
பகிர்:

தேனி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 105 பேருக்கு புதிய தொழில் தொடங்க ரூ.39.50 கோடி கடன் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு புதிய தொழில் தொடங்க தலா ரூ.50 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கி அவா் பேசியதாவது:

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் வட்டாரங்களில் உள்ள 30 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், சுய உதவிக் குழு உறுப்பினா்கள், ஆதி திராவிடா், பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகள், இளைஞா்கள், தொழில் முனைவோருக்கு புதிய தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

கடன் தொகையை முறையாக செலுத்துவோருக்கு இணை மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 105 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.39.50 கோடி கடனுதவியும், ரூ1.19 கோடி இணை மானியமும் வழங்கப்பட்டது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் ஜெயசங்கா், முன்னோடி வங்கி மேலாளா் விஜயசேகா், மாவட்டத் தொழில் மைய இயக்குநா் கருப்பையா, வாழ்ந்து காட்டுவோம் திட்ட மேலாளா் சுந்தரபாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.