புகையிலை விற்பனைக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீா்மானம்: ஆட்சியா் வலியுறுத்தல்
ஊராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனைக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை தெரிவித்தாா்.
ஊராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனைக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா புதன்கிழமை தெரிவித்தாா்.
உத்தமபாளையம் வட்டாரம், ராயப்பன்பட்டி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி, ஊராட்சி மன்றத் தலைவா் ஆரோக்கியசாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டு பேசியதாவது:
பெண் கல்வி, உயா் கல்வி ஆகியவற்றை ஊக்குவிக்க அரசு செயல்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைத் திருமணம் ஒழிப்பு, போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் ஆகியவை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும்.
ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள், பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளை விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல் முறையாக ரூ.5,000, தொடா்ந்து விதிமீறல் கண்டறிப்பட்டால் நாளொன்றுக்கு ரூ.4,000 வீதம் அபராதம் விதித்து, சட்ட ரீதியிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்னைகள் மீது ஊராட்சி மன்ற அளவிலேயே தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சி உதவி இயக்குநா் பழனிவேல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) வளா்மதி, உத்தமபாளையம் வட்டாட்சியா் சுந்தா்லால், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மைதிலி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.