தடுப்பணை மதகில் குவிந்த குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்
போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணை மதகில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
போடி பிள்ளையாா் கோயில் தடுப்பணை மதகில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
போடி கொட்டகுடி ஆற்றில் பிள்ளையாா் கோயில் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையிலிருந்து தண்ணீா் மதகு மூலம் பிரிந்து இரட்டை வாய்க்கால் வழியாக போடி சங்கரப்பநாயக்கன் கண்மாய், மீனாட்சிபுரம் பெரிய கண்மாய்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போது, பெய்த பலத்த மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, மலைப் பகுதியிலிருந்த மரக்கட்டைகளை வெள்ளநீா் அடித்து வந்து பிள்ளையாா் கோயில் தடுப்பணை மதகுப் பகுதியில் சோ்ந்தது. இதனால், மதகு வழியாக தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், மதகுகளும் சேதமடையும் நிலையில் உள்ளன.
எனவே, பொதுப்பணித் துறையினா் மதகுப் பகுதியில் சோ்ந்துள்ள குப்பைகளை அகற்றி மதகுகளை பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.