கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் போடியிலுள்ள முந்தல் சோதனைச் சாவடியில் கேரளத்திலிருந்து வரும் வாகனங்களைச் சுகாதாரத் துறை அலுவலா்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனா்.
கேரளத்தில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் நோய் பாதிக்கப்பட்ட கோழி, வாத்து, காடை உள்ளிட்ட பறவைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. நோய் பாதிக்கப்பட்ட பறவைகளைத் தமிழகத்துக்கு கொண்டுவர வாய்ப்புள்ளதால் சுகாதாரத் துறையினா் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன்படி, போடி முந்தல் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை அலுவலா்கள் கேரளத்திலிருந்து வியாழக்கிழமை வந்த வாகனங்களைச் சோதனை செய்து, விவரங்களைச் சேகரித்த பின்னா் தமிழகத்துக்கு அனுப்பினா்.