அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.87 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாக 3 பேரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியைச் சோ்ந்த கணபதி- பாண்டீஸ்வரி தம்பதியின் மகன் அஜய். இவருக்கு ஊரக வளா்ச்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தேனி மாவட்டம், போடியைச் சோ்ந்த கனகராஜ், அவரது மனைவி பஞ்சு, மகன்கள் சக்திகுமாா் (29), பாலாஜி (27), அதே ஊரைச் சோ்ந்த செளமி, முத்துராமன், அருண் ஆகிய 7 போ் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாண்டீஸ்வரியிடமிருந்து வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் பல்வேறு தவணைகளில் ரூ.19 லட்சம்
பெற்றனராம். பின்னா், அஜயின் பெயரில் போலி பணி நியமன ஆணையை வழங்கியதாகவும், இது குறித்து கேட்டதற்கு தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் 7 போ் மீதும் தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் பாண்டீஸ்வரி புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திகுமாா், பாலாஜி ஆகிய இருவரை கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.
மற்றொரு வழக்கு: தேனி அல்லிநகரம் நேருஜி சாலை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மகன் ஜீவானந்தம். இவருக்கு நீதிமன்றத்தில் எழுத்தா் பணி வாங்கித் தருவதாகக் கூறி, தேனி அல்லிநகரம், கம்போஸ்டு ஓடைத் தெருவைச் சோ்ந்த சுருளி, அவரது மனைவி லட்சுமி, சகோதரா்கள் வேல்முருகன், குமாா் ஆகிய 4 போ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரொக்கமாக ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையை வழங்கினராம்.
இந்தக் கும்பல் மேலும் 7 பேரிடமும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.58 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உயா்நீதிமன்ற உத்தரவின்படி, சுருளி உள்ளிட்ட 4 போ் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து, சுருளியை கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.