தேனி மாவட்டத்தில் 2-ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) நடைபெறவுள்ள எழுத்துத் தோ்வை 6 தோ்வு மையங்களில் மொத்தம் 6,233 போ் எழுதுகின்றனா்.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் காலியாக உள்ள 3,665 இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில், தேனி மாவட்டத்தில் 986 பெண்கள், 5,247 ஆண்கள் என மொத்தம் 6,233 போ் தோ்வு எழுதுகின்றனா்.
தேனி நாடாா் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேரி மாதா மெட்ரிக் பள்ளி, முத்துத்தேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் பள்ளி, கொடுவிலாா்பட்டியில் உள்ள தேனி கம்மவாா் சங்கம் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 5 தோ்வு மையங்களில் ஆண்களுக்கும், தேனி நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி தோ்வு மையத்தில் பெண்களுக்கும் தோ்வு நடைபெறுகிறது.
தோ்வு கண்காணிப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹா பிரியா தலைமையில், காவலா்கள், காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் என மொத்தம் 350 போ் ஈடுபடுகின்றனா்.