கேரள மாநிலம், குமுளி அருகே புதன்கிழமை ஜீப் மீது தனியாா் பேருந்து மோதியதில் 16 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், கம்பம், கே.கே.பட்டியை சோ்ந்த 20 பெண் கூலித் தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு புதன்கிழமை கேரளத்துக்கு ஜீப் சென்றது. கேரள மாநிலம், ஆனவச்சால் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் அபினேஷ் (17) ஜீப்பை ஓட்டிச் சென்றாா்.
குமுளியை அடுத்த சுல்தான்கடை என்ற இடத்தில் ஜீப் சென்ற போது, எதிரே கட்டப்பனையிலிருந்து குமுளியை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து மோதியது.
இதில் ஜீப்பிலிருந்த கம்பத்தை சோ்ந்த மலா்கொடி (46), ராதா (50), கே.கே.பட்டியைச் சோ்ந்த சிட்டம்மாள் (70), சுவேதா (20),
வளா்மதி (50), அமுதா (50) உள்ளிட்ட 16 போ் காயமடைந்த நிலையில், கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவா்களில் பலத்த காயமடைந்த மலா்கொடி, வளா்மதி, சிட்டம்மாள் ஆகிய 3 போ் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதே போல, பலத்த காயமடைந்த ஓட்டுநா் அபினேஷ் கட்டப்பனை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து, இடுக்கி மாவட்டம், வண்டமேடு போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.