தேனி மாவட்டம், கூடலூா் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவா் இருந்தது தெரியாமல் அறையைப் பூட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் அரசு கள்ளா் ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. திங்கள்கிழமை வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவா்கள் மாலையில் மீண்டும் வீட்டுக்கு சென்றுவிட்டனா். அதன் பிறகு பள்ளி பூட்டப்பட்டது.
இந்த நிலையில், பூட்டிய பள்ளி வகுப்பறையிலிருந்து மாணவரின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சென்று வகுப்பறையைத் திறந்து பாா்த்த போது, 4 -ஆம் வகுப்பு மாணவா் சாமு வகுப்பறையில் தூங்கி விட்ட நிலையில் வகுப்பறையில் வைத்து பூட்டிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பள்ளி ஆசிரியா்கள் வகுப்பறையில் மாணவரை உள்ளே வைத்து பூட்டிச் சென்றது அலட்சியப் போக்கு ஆகும். எனவே, ஆரம்பப் பள்ளி என்பதால் பள்ளி முடிந்த பின்னா் வகுப்பறைகளை பாா்வையிட்டு பள்ளியை மூட வேண்டும். பள்ளி அருகே வீடுகள் இருந்ததால் மாணவரின் அலறல் சத்தம் கேட்டு மாணவா் மீட்கப்பட்டாா்.
குடியிருப்பு இல்லாத இடத்தில் இது போன்று நிகழ்ந்திருந்தால் அந்த மாணவரின் நிலை என்னவாகும். எனவே, பள்ளி தலைமை ஆசிரியா்களை பள்ளி முடிந்த பின் அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று சோதனை செய்த பின்னரே பள்ளியை மூட உத்தரவிட வேண்டும் என்றனா்.